Pages

Wednesday, February 27, 2013

நரேந்திரன் கண்ட தீர்வு!

சிறுவன் நரேந்திரனிடம் "தலைமைப் பண்பு' என்பது இயல்பாகவே அமைந்திருந்தது. அவன் தன் நண்பர்களை பொருட்காட்சி, கண்காட்சி,நினைவுச் சின்னம், பூங்கா போன்ற இடங்களுக்கு அவ்வப்போது சுற்றுலாவாக  அழைத்துச் செல்வான். கொல்கத்தா, புறநகர் பகுதியில் உயிரியில் பூங்கா ஒன்று இருந்தது. ஒரு நாள் நரேந்திரன் தன் நண்பர்களை, அந்த உயிரியில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவர்களுக்கு மகிழ்ச்சியாக பொழுது போயிற்று. அங்கிருந்து அவர்கள், கங்கையில் படகில் கொல்கத்தாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். படகில் வந்துகொண்டிருந்தபோது, நரேந்திரனின் நண்பன் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிற்று. அதனால் அவன் படகிலேயே வாந்தி எடுத்தான்.

அதைப் பார்த்த படகோட்டிகள் சிறுவர்களிடம், ""நீங்களே உங்கள் கையால் படகை சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் இங்கிருந்து போக முடியாது!"" என்று கண்டிப்புடன் கூறினர். அதை மறுத்து நரேந்திரனும் அவனது நண்பர்களும், ""படகுப் பயணத்திற்கு இரண்டு மடங்குக் கட்டணம் தருகிறோம்'' என்று படகோட்டிகளிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதற்கு படகோட்டிகள் ஒப்புக்கொள்ளாமல் தகராறு செய்தனர். படகு கரையை  அடைந்தது. படகோட்டிகள் சிறுவர்களிடம், ""நீங்கள்தான் படகைச் சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் படகிலிருந்து இறங்க முடியாது!'' என்று கடுமையாகக் கூறி பயமுறுத்தினார்கள். அப்போது யாரும் கவனிக்காத சமயத்தில், நரேந்திரன் படகிலிருந்து இறங்கிக் கரைக்குச் சென்றான். அங்கு கங்கைக் கரையில் இரண்டு ஆங்கிலேய சிப்பாய்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நரேந்திரன் அணுகி, தனக்கும் தன் நண்பர்களுக்கும் படகோட்டிகளால் ஏற்பட்டிருக்கும் சங்கடத்தைத் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டான்.

மேலும் அவன் ஆங்கிலேய சிப்பாய்களின் கைகளை மெல்லப் பற்றி, அவர்களைப் படகு இருந்த இடத்திற்கே அழைத்தும் வந்துவிட்டான். ஆங்கிலேய சிப்பாய்கள் படகோட்டிகளிடம், சிறுவர்களைப் படகிலிருந்து இறங்கவிடுங்கள்!'' என்று கடிந்து கூறினர். இப்படி ஆங்கிலேய சிப்பாய்கள் கூறியதும், மறு பேச்சில்லாமல் படகோட்டிகள் சிறுவர்கள் படகிலிருந்து இறங்கிச் செல்ல அனுமதித்தனர். நரேந்திரனின் துணிவு ஆங்கிலேய சிப்பாய்களை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நரேந்திரனை ஏதோ ஒரு பொழுபோக்கு நிகழ்ச்சிக்குத் தங்களுடன் வருமாறு அழைத்தனர். அதற்கு நரேந்திரன் ஒப்புக்கொள்ளாமல், ""மிகவும் நன்றி, நான் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றான். இந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவராகி, "சுவாமி விவேகானந்தர்' என்ற உலக புகழ்பெற்ற துறவியாக விளங்கினார்

பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்!

ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.

தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது! என்றார்கள்.

இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம்

கடமையைச் செய், உயர்வை அடைவாய்!

கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம்! கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்துகொண்டேன். இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.

அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக்கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து, வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து, இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்