Pages

Thursday, April 18, 2013

கோடைகாலம்

காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். இது சருமத்தையும் மென்மையாக வைத்திருக்க உதவும்.வியர்வை நாற்றத்தைப் போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும்.

தினசரி ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடம்பும் தளதள வென்று இருக்கும்.

பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்து கிடைக்கும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் தோலின் நிறத்தைப் பாதுகாக்க தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வரவும்.

குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது கிருமி நாசினியாகவும் திகழ்கிறது.

கண்கள் குளிர்ச்சி அடைய முருங்கைப் பூவை சமைத்து சாப்பிடலாம். ஒரு துணியில் முருங்கைப் பூவை இடித்துக் கட்டி கண்களின் மேல் 10 நிமிடம் வைக்கலாம். கண்கள் புத்துணர்ச்சியுடன் திகழும்.

நாள்தோறும் கேரட்டை பாலோடு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஜுஸ் செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தெளிவடையும். உடலில் தசைப்பற்று உண்டாகும்.

பதநீர் குடித்தால் பற்களில் ஏற்படும் ஸ்கர்வி நோய் குணமாகும். பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதைப் போக்க மருதாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவவேண்டும்.

பாலில் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். எடை கூடும். சருமம் பளபளக்கும்.

கோடை காலத்தின்போது முகத்தில் வெண்புள்ளிகள் தோன்றுவது சகஜம். இதைப் போக்க தினமும் வெள்ளை கரிசலாங்கண்ணி இலைகள் ஐந்தைப் பறித்து அதனுடன் துளசி இலைகள் மூன்றைச் சேர்த்து மென்று காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.

தினமும் உணவில் மிளகு, வல்லாரை, சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

சம்பா அரிசியை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் தோலின் தன்மை மென்மையாக மாறுவதுடன் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.கண்களில் குளிர்ச்சியை உண்டாக்க தாமரைப் பூவை கண்களில் சிறிது நேரம் வைத்துக் கொண்டால் போதும்.

இளநீரை தினமும் குடித்து வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும். உடல் சோர்வு அகலும்.

அதிகமாக உழைக்கும் மனித உறுப்புகளில் கண்களுக்கு பெரும் பங்கு உண்டு. கண்களைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் முதலில் அதற்கு ஓய்வு தேவை. எப்போதும் ஓய்வுக்குப் பின் புத்துணர்வு கிடைக்கும்.

கண்களின் வளமைக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடவேண்டும். மாதம் ஒரு முறை மெல்லிய மசாஜ் செய்யவேண்டும்.பெண்கள் பேரீச்சம் பழத்தை வெண்ணையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பகங்கள் வளமை பெறும்.


இளநீருடன் சந்தனத்தை சேர்த்து உடலில் தடவி குளித்தால் உடல் குளர்ச்சி ஏற்படும். கழிவு நீர் வெளியேறி விடும்.

தினமும் ஏதாவதொரு பழ ஜுஸ் அருந்தி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும் வலிமையும் கிடைக்கும்.

பிளம்ஸ் பழமும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
எலுமிச்சை சாறு தடவி ஊறிய பின் குளித்து வந்தால் சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.

தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து குடித்தால் கோடையில் வெளியேறும் வியர்வைக்கு ஈடாகும்.

Monday, April 1, 2013

ஏப்ரல்1


16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் முதல் நாளே புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

Tuesday, March 26, 2013

பால் கலப்படம்

நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான்!

நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான். ஆனால், தற்போது, வட மாநிலங்களில் நடக்கும் பால் கலப்படம், உயிரையே பறித்து விடும் ஆபத்து கொண்டது எனக் கூறினார் இத்துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர்.

உ.பி., ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருவதாகவும் கூறினார் நண்பர்!

"சிந்தெடிக்' பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?

* காஸ்டிக் சோடா.
* தண்ணீர்.
* ரீபைன்ட் ஆயில்.
* உப்பு.
* சர்க்கரை.
* யூரியா.

இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்!

பாலை சோதனை செய்யும் நிமித்தம், ராஜஸ்தான் மாநிலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டு இருக்கிறார் நண்பர். அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு, "டிடர்ஜென்ட்' சோப் பவுடருக்கு ஏக, "டிமாண்ட்' இருப்பதைக் கண்டு இருக்கிறார். இந்த கிராக்கிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை புலப்பட்டுள்ளது.

இந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால், அதில் இருந்து வரும் வாசனை, பால் வாசனை போலவே இருந்ததாம். இந்த சோப்புத் தண்ணீரை, பாலுடன் கலந்து விற்பனை செய்து விடுகின்றனராம்! ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனை மேற் கொண்ட, 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற கலப்படம் நடப்பதை நண்பர் கண்டு பிடித்துள்ளார்!

பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!

இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, "ஹோமோஜினைஸ்' என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, "குளோபுயூல்ஸ்' - சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!

நம்மூர் பால்காரர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்கிறீர்களா?

கோபுர ரகசியம்

கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

Monday, March 4, 2013

புத்தர்

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை.

அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.

“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள்.

புத்தர் சிரித்தார். “இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்...!
முதன் முதலில் நமது தேசிய கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா ???

பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியை வடிவமைத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்????


கண்டிப்பா இதை படித்து மறைக்க பட்டுகொண்டு இருக்கும் வரலாறை தெரிந்து கொள்ளுகள் தெரியாதவர்களுக்கு தெரிய படுத்துங்கள் !!!!

பதுருதின் தியாப்ஜி லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்ளறிஞர்)April 1867 தான் பணியே தொடர்ந்தார் பாம்பேயின் முதல் வழக்கு அறிஞர்ராக திகழ்ந்த இவர் . பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர் . 1895 பாம்பே உயர் நீதிமன்றத்தில் நீதி பதியாக பணியாற்றினார் பின்பு 1902 இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார் .பல வருடகாலம் பொது வாழ்க்கையில் ஈடுபற்றார் இந்திய நேஷனல் காங்கிரஸின் முதல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார் . 1876 (AI) இயக்கம் மூலமாக அணைத்து மக்களின் முனேற்றதிர்க்காகபாடுப்பட்டார் . இந்தியாவில் அனைத்து மக்களும் சகோதரதுடனும் சரி சமமாகும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .அரசியல் வாழ்கையில் நல்ல பெயரும் பெற்றார்

இவருடைய ஆளுமை திறனால் தான் இஸ்லாமியர்கள் அதிகமா இந்திய நேஷனல் காங்கிரசில் சேர்ந்தனர் என்று புகழாரம் சூற்றினர்
மகாத்மா காந்திஜி .அஹ்மத் கான் மற்றும் Badruddin Tyabji இந்திய நேஷனல் காங்கிரசுக்கு பெரும் பங்கு ஆற்றினர். இந்தியாவில் மத சார்ப்பற்ற அரசியல் வர விரும்பினார் .அவருடைய மனைவி தான் முதல் சுதந்திர இந்தியாவில் தேசிய கொடியே வடிவமைத்தார் . அவர்களின் குடும்பமே சமுதாயத்திற்கும் கல்விக்கும் இந்திய விடுதலைக்கும் பெரும் பங்கு ஆற்றினார்கள்

ஆனால் தேசிய கொடியே ஒரு முஸ்லிம் தான் வடிவமைத்தார் என்பதற்காக பல இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்புகள் அவர்களுடைய அலுவலங்கள் மற்றும் பொது இடங்களில் இந்திய தேசிய கொடியே பயன் படுத்துவதே இல்லை , அவர்கள் அவர்களின் காவி கொடியே தான் ஏற்றுவார்கள் . ஆனால் டெல்லி செங்கோட்டையில் தான் பிரதமர் கொடியே ஏற்றுகிறார்.அப்போ அந்த கட்டிடம் யார் கட்டியது என்று அவர்கள் சிந்திக்கவில்லை . அதை ஷாஜகான் தான் கட்டினர் என்று மறந்து விட்டனர் .அதனால் அவர்களுக்கு நாம் நியாபகம் காட்டவேண்டும் அது நமது கடமை அல்லவா ?????????

Wednesday, February 27, 2013

நரேந்திரன் கண்ட தீர்வு!

சிறுவன் நரேந்திரனிடம் "தலைமைப் பண்பு' என்பது இயல்பாகவே அமைந்திருந்தது. அவன் தன் நண்பர்களை பொருட்காட்சி, கண்காட்சி,நினைவுச் சின்னம், பூங்கா போன்ற இடங்களுக்கு அவ்வப்போது சுற்றுலாவாக  அழைத்துச் செல்வான். கொல்கத்தா, புறநகர் பகுதியில் உயிரியில் பூங்கா ஒன்று இருந்தது. ஒரு நாள் நரேந்திரன் தன் நண்பர்களை, அந்த உயிரியில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவர்களுக்கு மகிழ்ச்சியாக பொழுது போயிற்று. அங்கிருந்து அவர்கள், கங்கையில் படகில் கொல்கத்தாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். படகில் வந்துகொண்டிருந்தபோது, நரேந்திரனின் நண்பன் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிற்று. அதனால் அவன் படகிலேயே வாந்தி எடுத்தான்.

அதைப் பார்த்த படகோட்டிகள் சிறுவர்களிடம், ""நீங்களே உங்கள் கையால் படகை சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் இங்கிருந்து போக முடியாது!"" என்று கண்டிப்புடன் கூறினர். அதை மறுத்து நரேந்திரனும் அவனது நண்பர்களும், ""படகுப் பயணத்திற்கு இரண்டு மடங்குக் கட்டணம் தருகிறோம்'' என்று படகோட்டிகளிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதற்கு படகோட்டிகள் ஒப்புக்கொள்ளாமல் தகராறு செய்தனர். படகு கரையை  அடைந்தது. படகோட்டிகள் சிறுவர்களிடம், ""நீங்கள்தான் படகைச் சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் படகிலிருந்து இறங்க முடியாது!'' என்று கடுமையாகக் கூறி பயமுறுத்தினார்கள். அப்போது யாரும் கவனிக்காத சமயத்தில், நரேந்திரன் படகிலிருந்து இறங்கிக் கரைக்குச் சென்றான். அங்கு கங்கைக் கரையில் இரண்டு ஆங்கிலேய சிப்பாய்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நரேந்திரன் அணுகி, தனக்கும் தன் நண்பர்களுக்கும் படகோட்டிகளால் ஏற்பட்டிருக்கும் சங்கடத்தைத் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டான்.

மேலும் அவன் ஆங்கிலேய சிப்பாய்களின் கைகளை மெல்லப் பற்றி, அவர்களைப் படகு இருந்த இடத்திற்கே அழைத்தும் வந்துவிட்டான். ஆங்கிலேய சிப்பாய்கள் படகோட்டிகளிடம், சிறுவர்களைப் படகிலிருந்து இறங்கவிடுங்கள்!'' என்று கடிந்து கூறினர். இப்படி ஆங்கிலேய சிப்பாய்கள் கூறியதும், மறு பேச்சில்லாமல் படகோட்டிகள் சிறுவர்கள் படகிலிருந்து இறங்கிச் செல்ல அனுமதித்தனர். நரேந்திரனின் துணிவு ஆங்கிலேய சிப்பாய்களை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நரேந்திரனை ஏதோ ஒரு பொழுபோக்கு நிகழ்ச்சிக்குத் தங்களுடன் வருமாறு அழைத்தனர். அதற்கு நரேந்திரன் ஒப்புக்கொள்ளாமல், ""மிகவும் நன்றி, நான் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றான். இந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவராகி, "சுவாமி விவேகானந்தர்' என்ற உலக புகழ்பெற்ற துறவியாக விளங்கினார்

பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்!

ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.

தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது! என்றார்கள்.

இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம்

கடமையைச் செய், உயர்வை அடைவாய்!

கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம்! கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்துகொண்டேன். இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.

அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக்கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து, வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து, இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்